கட்டுரைகள்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு'. மனமே வாழ்வதற்காகவும், கடவுளாகவும் தன்னையே ஆளும் சக்தியும் கொண்டது. மனவுறுதி கொண்டவர்கள் வாழ்வில் எந்நாளும் தோற்றதில்லை. தனி மனிதன் தன் வாழ்வில் எந்நாளும் தோற்றதில்லை. தனி மனிதம் தன் வாழ்வில் பல பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வாழ்க்கையில் பல சோதனைகளும் வேதனைகளும், தோல்விகளும் ஏற்படுகிறது. எதிர் நீச்சல் கொண்டு அதனை கடந்து செல்பவன் மறுகரையை அடைகிறான். அதை சமாளிக்காதவன் தன்னையே மூழ்கடித்துக் கொள்கிறான். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை தடைகற்களாக நினைக்காமல் பனிக்கட்டிகளாக நினைப்பவன் வாழ்வில் வெற்றியும்,சாதனைகளையும் பெறுகிறான்.

அமைதி பெறும் மனம்மன உறுதி என்ற யோகாவினால் மனம் அமைதி பெறுகிறது.

மனதை ஒரு நிலைப்படுத்தி தன் நினைவுகளையெல்லாம் புருவத்தின் இடையில் வைத்து தன்னையே மறந்து பத்து நிமிடமாவது தியானம் செய்தால் மனம் அமைதி பெறும். இன்றைய அவசர காலகட்டத்தில் மனிதன் தன்னைப் பேண மறந்து விடுகிறான். உடல் உழைப்பினால் அவன் மிகவும் சோர்வடைகிறான்.தனி மனிதன் தான் எடுக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தால் அவன் சோர்வடைகிறான். அடுத்த முயற்சிக்கான வழிகளை அவன் தேடுவதில்லை.

தனி மனிதன் தன்னுடைய மன அழுத்தம், ஏக்கம், பயம், மனக் குழப்பம், குற்ற உணர்வு, கவலை, மனச்சோர்வு போன்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து முழுமையாக விடுபட்டு மனநிறைவோடும், தன்னம்பிக்கையோடும் சமூக பண்புகள் மற்றும் சமூக முதிர்ச்சியுடன் திகழ வழிகாட்டுவது

பெரியோர்களின் கடமை. மனநலம், உடல்நலம் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடல் நல பிரச்னைகள் உள்ள ஒருவரிடம் மனச்சோர்வு, மகிழ்ச்சியின்மை, எரிச்சல், கோபம் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றை நல்ல தியானம் மூலமும், மன அமைதி மூலமும், மன

உறுதி கொண்டும் முறியடிக்கலாம்.'ஒன்பது முறை தோல்வி அடைந்தவனைப் பார்த்து மனஉறுதியானது கேட்டது - நீஒன்பது முறை விழுந்து எழுந்தவன் என்றது'.

மகிழ்ச்சி பெற : மகிழ்ச்சியாக இருப்பற்கு வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். தான் செய்யும் செயலில் மனநிறைவு கொள்ள வேண்டும். ஒருவன் தான் செய்யும் தொழில் சிறியதாயினும் அல்லது பெரியதாயினும் கிடைக்கும் வருமானம் கொஞ்சமாக இருந்தாலும் மனநிறைவு கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவ தேவை மனவளம். மனவளம் என்றதும் நினைவிற்கு வருவது விவேகானந்தர். அவர் மனவளம் குறித்து பல அரிய கருத்துக்களை எழுதியவர். 'உனக்குள் எல்லா வலிமையும் இருக்கிறது. உன்னால் எதையும் சாதிக்க முடியும்நீ துாய்மையுள்ளவனாகவும் வலிமையுள்ளவனாகவும் இருந்தால்

நீ ஒருவனே உலகில் உள்ள அனைவருக்கும் சமமானவன் ஆவாய் உயிரே போனாலும் நேர்மையுடன் இரு.'விவேகானந்தர் எழுதியதோடு, பேசியதோடு நில்லாமல் வாழ்விலும் கடைபிடித்தவர்.

வெற்றியின் முதல்படி : நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.'இல்லை' என்று ஒருபோதும்

சொல்லாதே. 'என்னால் இயலாது' என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்க கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ. போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாதே.

ஓராயிரம் முறை நீ உனது லட்சியத்தை கைக்கொள்ள முயற்சி செய். வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் மனஉறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.

'உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு; ஏற்கனவே நடந்து முடிந்ததை குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும்,சிந்தனையும், செயலும் அதற்கு ஏற்ற பலனை தரும் வகையில் மனதில் நினைவில் வைக்க வேண்டும். உனது தீய எண்ணங்களும், செயல்களும் உன்மீது பாய்வதற்கு தயாராக இருக்கின்றன.அதைப் போல உனது நல்ல எண்ணங்களும், செயல்களும் ஒரு நுாறாயிரம் தேவைகளின் ஆற்றலுடன் உன்னை நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தயாராக இருக்கின்றன. இதை நீ எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். துாய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும். தன்னுடைய சொந்த சுக வசதிகளை மட்டும் கவனித்துக் கொண்டு சோம்பல் வாழ்க்கை வாழும் சுயநலக்காரனுக்கு நரகத்திலும் இடம் கிடையாது. பொறாமை

பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும்

உன்னிடமே திரும்பி வந்து விடும். வேறு எந்த சக்தியாலும் அவற்றை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு முறை நீ அவற்றை இயங்கச் செய்து விட்டால் அதனால் வரும் விளைவையும் ஏற்றே ஆகவேண்டும். எனவே நல்ல மனநிலையும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். பல பேர் தோல்வி அடைந்து விழுந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறி விழுவதின் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை நிலை நிறுத்த முடியும். ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளாக கடந்தாக வேண்டும். ஏளனம், எதிர்ப்பு, பிறகு ஏற்றுக் கொள்ளப்படுதல். உறுதியாகவும், துாய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும். ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்படிவதற்கு

ஒருவரும் தயாராக இல்லை. முதலில் கீழ்படிவதற்கு கற்றுக் கொள்; அதன் பின்பு எஜமானாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

கல்விச் செல்வம் : எத்தகைய கல்வி நல்லஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை உருவாக்குமோ, விரிந்த அறிவைத் தருமோ மற்றும் ஒருவனை தன்னுடைய சுய

வலிமையை கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்கு தேவை. எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வது தான் ஆசிரியருடைய வேலை. ஒரு கொள்கையை எடுத்துக் கொள் அதற்காகவே உன்னை அற்பணித்து பொறுமையுடன் போராடி கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றை தவிர வேறொன்றுமே நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை. கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி அல்லது நாத்திகனாக இருந்தாலும் சரி, வேதாந்திரியாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி உன்னுடைய சுக துக்கங்களை மறந்து நீ வேலை செய்.

மனித வளம் : எந்த விதமான சுயநோக்கும் இல்லாமல் பணம், புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன் தான் சிறப்பாக பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும் போது அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுகிறான். உலகத்தை மாற்றி அமைக்க கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடம் இருந்து வெளிப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு தோல்வி என்றவுடன் மனம் தளர்ந்து விடுகின்றனர். குரங்கு விதை விதைத்து தண்ணீர் ஊற்றிவிட்டு, மறுநாள் மண்ணை தோண்டி விதையை எடுத்துப் பார்த்து முளைக்கவில்லையே என்று வருந்தியது போலவே இன்றைய இளைஞர்கள் பலர் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகின்றனர்.தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயல்வதே மனவலிமை. யாராவது நம்மை கேலி பேசி அவமானப்படுத்தினால் கோபப்பட்டு திரும்பி பேசாமல், அடிக்காமல், வாழ்வில் வென்று காட்டுவதே சிறப்பு. அதற்கு மன

வலிமை அவசியம். மனவளம் அமைதியாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். உடல் நலத்தையும் மனவளமே முடிவு செய்கிறது.'மனம் ஒரு குரங்கு' என்று ஒரு பழமொழி உண்டு. குரங்கு தான் அடிக்கடி தாவும், அதனை கட்டுப்படுத்துவது நம் கடமை. பிறந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. சாதித்து சிறப்பதே வாழ்க்கை என்பதை உணர வேண்டும். மனதை வளமையாக்கி, வலிமையாக நல்ல வண்ணம் வாழ்வோம்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube


Back to Top