ஆவினன்குடியில் முருகன் உலா வருகின்றான். அவனுக்கு முன்பாக சிலர் நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் தைத்த தழையாடையை உடுத்தியிருந்தார்கள். தலைமுடி சங்கின் வண்ணம்போல சீராக வெளுத்திருந்தது.
யாரையும் குற்றம் காணாத பார்வையும் யாரும் குற்றம் காண முடியாத உருவமும் கொண்டிருந்தனர். ஊன் வற்றி எலும்பு தெரியும் மார்பில், தைத்த மான் தோலை அணிந்திருந்தனர். நண்பகல் உணவும் பலநாள் இல்லாமல் சிலநாட்களில் மட்டுமே உண்டனர்.
அவர்கள் பிறரோடு மாறுபாடு இல்லாத பிறர்மீது சினம் கொள்ளாத மனத்தினர். கற்றோரும் இவர்களைப்பற்றி எதனையும் எளிதில் அறிய முடியாத பேரறிவினர். கற்றவர்களுக்கு எல்லை கட்டிய தலைவர்கள் அவர்கள்
காமத்தையும் கடுஞ்சினத்தையும் விலக்கிக் கட்டான பண்புடன் காட்சி தருபவர். துன்பம் எதையுமே அறியாது இன்பமாகக் காணும் இயல்புடையவர். இவர்கள் எல்லாரையும் விரும்புவதால் யாரோடும் பிணக்கின்றிக் காட்சி தருபவர்.இவர்களை முன்னே நடக்கச் செய்து பின்னாலே நடந்து வருகிறான் முருகன்.
அவனுக்குப் பின்னாலே பெண்கள் வருகிறார்கள். வெண்புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்,மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் கொண்டு அவர்கள் வருகிறார்கள்.
அவர்கள் கைகளில் யாழ் இருக்கிறது. இசையை அளந்து நரம்பைக் கட்டின குற்றமற்ற யாழ் அது. அதை இசைத்துக் கொண்டு நல்ல சொற்களால் பாடல் இசைத்துக்கொண்டு வருகிறார்கள்.
மாவின் நிறமொத்த நோய் நொடியற்ற உடல் கொண்டவராக இருந்தாலும் இசை நயந்து ஒலிக்கிறது. பேரோசையாயில்லை. மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும் கொண்ட மகளிரோடு முனிவர்கள் சூழ முருகன் ஆவினன்குடியை வலம் வருகிறான்.
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். 130
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை 135
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின். 140
நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் 145
பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
lanka4youtube